ஈழத்தமிழருக்குத் துணைதரும் வெளிப்படுத்துகை

2021 பெப்ரவரி 13 ஆம் 14 ஆம் நாட்களில் சிவப்பு-ஒஸ்லோவின் வருடாந்தக் கூட்டத்தில் இந்த வெளிப்படுத்துகை நிறைவேற்றப்பட்டது.

ஈழத்தமிழருக்குத் தோள்கொடுக்கவேண்டும்! இலங்கையால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களைக் கண்டிப்போம்! இனவழிப்பு நினைவுகூரற் சின்னம் இடிக்கப்பட்டதைக்கண்டிப்போம்!

நினைவேந்தற் சின்னம் இராணுவத்துணையுடன் அழிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தற் சின்னம் 08.01.2021 அன்று இலங்கையின் இராணுவம் மற்றும்காவற்துறையால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மாணவர்கள், அரசியல் மற்றும் சிவில்சமூகப் பிரதிநிதிகள் பல்கலைக்கழகத்துக்கு வெளியே அதை எதிர்த்து மேற்கொண்டஆர்ப்பாட்டத்தையும் மீறி இடித்தழிப்பு நடந்தேறியிருக்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வளாகத்தினுள் செல்லமுடியாதவாறு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினராலும்காவற்துறையாலும் தடுக்கப்பட்டுள்ளார்கள்.

18.05.2009 போரின் முடிவில் அரசபடைகளால் நிறைவேற்றப்பட்ட இனவழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவையொட்டி ஈழத்தமிழ் மாணவர்கள், அரச மற்றும் சிவில்சமூகபிரதிநிதிகளினால் இந்த நினைவேந்தற் சின்னம் 2019 இல் அமைக்கப்பட்டது. போரின் இறுதிநாள் ஈழத்தமிழர்களால் இனவழிப்பு நினைவு நாளாகநினைவுகூரப்பட்டுவருகின்றது. 2009 இலைதுளிர் காலத்தில் மட்டும் 70,000 தொடக்கம் 146,000 வரையான எண்ணிக்கையில் ஈழத்தமிழர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. அன்றிலிருந்து கொழும்பு அரசாங்கம் தமிழர் மிகுந்திருக்கும் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து அங்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.

ஈழத்தமிழர் பகுதிகளில் சிங்கள-பௌத்த நிறுவனங்களை அமைப்பதும், சிங்களவர்கள் அப்பகுதிகளுக்குள் குடியேறும் வகையில் நிதியுதவி புரிவதுதுமாக முனைப்புடன்இனச்சுத்திகரிப்புத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துவருகிறது. காலப்போக்கில், அப்பகுதிகளின் குடிப்பரம்பல், பண்பாடு மற்றும் அடையாளம் ஆகியவை பெருமளவில்மாற்றம்பெற்றுவிடும் - இதனால் ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமைக்கோரிக்கையின் மூல அடிப்படைகளே தகர்க்கப்பட்டுவிடும்.

தீவில் நோர்வே ஆற்றிய பங்கு

அமைதிக்கான அனுசரணையை மேற்கொண்ட பின்னணியுடைய நோர்வே அரசானது, தீவிலே தமிழர்களின் வரலாற்றின் மீதும், அவர்களின் நாட்டுப்புறவியல் மற்றும் மரபியல்விழுமியங்கள் மீதும் விடாத்தொடராகக் கட்டவிழ்த்திருக்கும் அழிப்பைப் பற்றியோ, தொடர்ந்துகொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைப் பற்றியோ குரலெழுப்பாதுபலமுறை நழுவி வந்திருக்கிறது.

அமைதி ஒப்பந்தத்தினூடாக நோர்வே பரந்துபட்ட புவிசார் அரசியலுக்கும், அத்தோடு அமெரிக்காவின் பிராந்திய நலனுக்கும் உட்பட்ட ஒரு பகடைக்காய் ஆகிவிட்டது. அரசியல்-இலங்கையின் அரசை ஏற்புடைய ஒன்றாக அமைதி ஒப்பந்தம் நியாயப்படுத்திய அதேவேளை, ஈழத்தமிழரின் போராட்டத்தைப் பேய் போலச் சித்தரிக்கும் செயற்பாடும்நடந்தேறியது. உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா, பிரித்தானியா, சீனா மற்றும் இந்தியா ஆகியவை இலங்கை அரசை இராணுவ, அரசியல் மற்றும் பொருண்மியரீதியாகப் பலப்படுத்தின. தமிழர்களின் தேசியச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வை நோக்கிய வழியைத் திறந்துவிட்டு, இலங்கையின் இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளைஅழித்து ஓர் இனவழிப்பையும் 2009 இலைதளிர்காலத்தில் நடாத்திமுடிப்பதற்கு இது ஏதுவாயிற்று.

நோர்வேயிடமிருந்து கணிசமான பொருளாதார உதவியைப் பெறும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருந்துவந்திருக்கிறது என்பதற்கும் அப்பால், சமீப காலத்தில்இலங்கையுடன் அரசமட்டத்திலான பொருண்மிய மற்றும் பண்ணுறவுத் தொடர்புகளையும் நோர்வே கட்டியெழுப்பியிருக்கிறது.

இப்படியான தொடர்புகள் இலங்கை அரசுடன் பேணப்படுகையில், அதற்கு அப்பால் அரசியலார் கூட அங்கு நிகழும் அடக்குமுறை குறித்த கேள்விகளை நோர்வேயின்பெருமன்றில் எழுப்பவில்லை. ஊடகங்களும் இதைக் கையாளவில்லை.

அச்சந்தரும் வகையில் தொடரும் உள்நாட்டுப் போர் முடிவின் பின்னான போக்கு

இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கைத் தமது தாயகமாகக் கொண்ட ஈழத்தமிழர்கள் 1948 ஆம் ஆண்டில் இருந்து தமது தன்னாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் ரீதியாக அணிதிரண்டு வந்துள்ளனர். இலங்கைத் தீவில் கூட்டாட்சி முறையை ஏற்படுத்துவதைத் தமது இலக்காகக் கொண்டு அவர்களின் போராட்டம் ஆரம்பத்தில்முன்னெடுக்கப்பட்டது. எனினும் 1970களில் அரசபயங்கரவாதம் பெருவீச்சுக் கொண்டதன் விளைவாக ஈழத்தமிழர்களின் போராட்டம் சுதந்திர நாடொன்றை அமைப்பதைவிருப்பாக்கி ஆயுத மோதலாக விரிவடைந்தது.

தமது மக்கள் கூட்டத்துக்கு எதிராக ஆட்சியதிகாரம் கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறையைக் கண்டித்தும், போரில் ஆகுதியானோருக்கான நீதியைக் கோருவதற்காககவும்2009 இற்குப் பின்னரும் ஈழத்தமிழர்கள் பல ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்திவந்துள்ளார்கள். இற்றைவரை தமிழர்களின் தன்னாட்சியுரிமையை இலங்கை ஆட்சியதிகாரத்தின்எந்த மட்டங்களும் அங்கீகரிக்கவில்லை; நடந்தேறியது இன அழிப்பு என்பதையும் ஒத்துக்கொள்ளவில்லை. போரில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றநிலைப்பாட்டிலேயே அவை பிடிவாதமாக இருந்துவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 19ம் நாளில் அரசதரப்புகள் போர் வெற்றியைக் கொண்டாடும் பெருமெடுப்பிலானஊர்வல அணிவகுப்புகளையும் நடாத்தி வருகின்றன. ஆனால், ஈழத்தமிழர்கள் இதற்கு ஒரு நாள் முன்பதாக இன அழிப்பில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரை நினைவுகூருகிறார்கள் - தீவில் நிலவும் தேசியச் சிக்கலின் வேறுபாட்டை இது தெளிவாகக் காட்டுகிறது.

யாழ்ப்பாணத்தில் நினைவுச்சின்னம் தகர்க்கப்பட்டமையானது இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்தும் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதைவலுவாக நினைவுறுத்துவது மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருக்கக்கூடிய மக்கள் மட்டத்திலான அமைப்புகள் ஈழத்தமிழருக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பது எவ்வளவு முக்கியம்என்பதையும் வலியுறுத்துகிறது. ஈழத்தமிழருக்குத் துணைதரும் குரலைக்கொடுத்து, தனது நாட்டிலேயே எண்ணிக்கையில் குறைவான மக்கள் மீது இலங்கை அரசுகட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைகளைக் கண்டிப்பதன் மூலம் அந்த அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். அத்துடன், இலங்கைத் தீவின் சிக்கலைத் தீர்த்துவைப்பதற்கு ஏதுவாக அடிப்படை மையக்கோரிக்கையான தமிழர்களின் தன்னாட்சி உரிமை என்பது விரைவாக அங்கீகரிப்படுவதும் முக்கியமானதாகும். இலங்கைத் தரைப்படையால் ஈழத்தமிழர் மீதுமேற்கொள்ளப்பட்டது இன அழிப்பு என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அத்தோடு, எண்ணிக்கையில் குறைந்த மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்டுபேச்சுவார்த்தைகளைத் தொடரவேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு உள்ளது என்பதும் வலியுறுத்தப்படவேண்டும்.

சிவப்பு-ஒஸ்லோவாகிய நாம் ஈழத்தமிழர் மீதும், அவர்களது தாயகம் மற்றும் அரசியல் உரிமைகள் மீதும் குறிவைத்திருக்கும் தேசியஅடக்குமுறை, ஆக்கிரமிப்பு மற்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு ஆகியவற்றைக் கண்டிக்கிறோம்

சிவப்பு-ஒஸ்லோவாகிய நாம் இலங்கையின் வடக்கு மற்றுக் கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களையும் ஈழத்தமிழர் மற்றும்தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் மரபுவழித் தாயகமாக அங்கீகரிக்கிறோம்

சிவப்பு-ஒஸ்லோவாகிய நாம் இலங்கைத் தீவில் தமிழர்களின் மரபுவழித் தாயகத்தில் அவர்களுக்கிருக்கும் தன்னாட்சி உரிமையைஅங்கீகரிக்கிறோம்.

தமிழ் இனவழிப்பு நினைவேந்தற் சின்னம் தகர்க்கப்பட்டமை தொடர்பான மேற்கோட் செய்திகள் வருமாறு:

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39965

http://www.jdslanka.org/index.php/news-features/politics-a-current-affairs/985-sri-lanka-muslims-join-tamils-protesting-the-demolition-of-war-dead-monument

(Oversettelsen er utført av Stiftelsen Tamilnet)